போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கைது

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கோரி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதம் ஒன்றை கொடுக்க வந்ததாகவும் அவ்வாறு கொண்டு வந்த கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நபர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை  வரை  3 நாட்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.