
போராட்டங்களின் எதிரொலி : ட்ரம்ப் நிர்வாகம் அடிபணிந்தது!
மினியாபோலிஸில் கடந்த சனிக்கிழமை குடியேற்றத் தடுப்பு முகவர்களால் அலெக்ஸ் ப்ரெட்டி என்ற செவிலியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, தனது நிர்வாகம் அனைத்தையும் தீவிரமாக மீளாய்வு செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மினியாபோலிஸ் நகரிலிருந்து இறுதியில் குடியேற்றத் தடுப்பு முகவர்களைத் திரும்பப் பெறப்போவதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அதற்கான காலக்கெடு எதையும் அவர் குறிப்பிடவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நான் விரும்புவதில்லை.
ஆனால், ஒருவர் போராட்டக்களத்திற்கு சக்திவாய்ந்த, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் வருவதையும் நான் விரும்பவில்லை என வோல் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலெக்ஸ் ப்ரெட்டி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறுகிறது.
ஆனால், அவர் கையில் கைபேசி மட்டுமே இருந்ததாகவும், அவரிடம் இருந்த துப்பாக்கி சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுக்கின்றனர்.
ஃபெடரல் முகவர்கள் தங்களைச் சம்பவ இடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக மினியாபோலிஸ் பொலிஸ் தலைவர் பிரையன் ஓஹாரா குற்றம் சாட்டியுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட அலெக்ஸ் ப்ரெட்டிக்கு எவ்வித குற்றப்பின்னணியும் இல்லை என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அவரை உள்நாட்டு பயங்கரவாதி என ட்ரம்ப் நிர்வாகம் வர்ணித்துள்ளது.
ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, பில் காசிடி போன்ற முக்கிய குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை கோரியுள்ளனர்.
வழக்கமாக ட்ரம்பிற்கு ஆதரவளிக்கும் தேசிய துப்பாக்கிச் சங்கம் கூட, இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நியூயோர்க், சிகாக்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
