
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
-திருகோணமலை நிருபர்-
நாட்டில் தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்திலும் விற்பனையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஹெரோயின் போதைப் பொருள், கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பாவிப்பவர்களின் வீதம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிராந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு குறித்த சந்தேக நபர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை மாலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி. சந்தியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 5 கிரேம் 600 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கிண்ணியா- பூவரசன்தீவு பகுதியைச் சேர்ந்த முகமட் சியாம் (31வயது) என்பவரை கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குறித்த நபர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.
