போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது

-மஸ்கெலியா நிருபர்-

நீண்ட வார விடுமுறை மற்றும் தீபாவளியை முன்னிட்டு நுவரெலியாவுக்கு சென்றிருந்த 18 பேர், பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் தெமட்டகொட, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் குஷ், ஹெராயின், ஐஸ், போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்களில், ஃபேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட விருந்துபசாரத்துக்காக நுவரெலியாவுக்கு வந்திருந்த குழுவினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மோப்ப நாய் பிரிவின் உதவியுடன், நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் அனைத்து பிரதான வீதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.