போக்லாந்து போர்
🌗போக்லாந்து போர் போக்லாந்து சண்டை, போக்லாந்து சிக்கல் என்றும் எசுப்பானியத்தில் குர்ரெ டெல் அட்லாண்டிகோ சுர் என்றும் அறியப்படும் இந்தப் போர் அர்கெந்தீனாவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே பத்து வாரங்கள் நடந்தது; தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள இரு பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களான போக்லாந்து தீவுகளையும் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகளையும் உரிமை கோரி இந்தப் போர் நடந்தது.
🌗ஏப்ரல் 2, 1982ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று இது தொடங்கியது. அர்கெந்தீனா தனது இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில் போக்லாந்து தீவுகளை அன்றைய தினம் ஆக்கிரமித்தது. அடுத்த நாள் தெற்கு சியார்சியாவையும் ஆக்கிரமித்தது. ஏப்ரல் 5 அன்று பிரித்தானிய அரசு தனது கடற்படை தொகுதி ஒன்றை சண்டைக்கு அனுப்பியது. இரு தரப்பினருக்கும் இடையே 74 நாட்கள் கடலிலும் வான்வெளியிலும் சண்டை நடந்தது. யூன் 14, 1982இல் அர்கெந்தீனா சரண்டைந்ததைத் தொடர்ந்து போர் முடிவுற்றது. இத்தீவுகள் பிரித்தானிய கட்டுப்பாட்டிற்கு திருப்பித் தரப்பட்டன. மொத்தத்தில், 649 அர்கெந்தீன படைத்துறையினரும், 255 பிரித்தானிய படைத்துறையினரும், மூன்று போக்லாந்து தீவினரும் இந்த சண்டைகளின் போது கொல்லப்பட்டனர்.
🌗இந்த நிலப்பகுதிகளின் இறைமை குறித்து இந்த இருநாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த பிணக்கு இந்தப் போருக்குக் காரணமாக அமைந்தது. அர்கெந்தீனா இத்தீவுகளை தன்னுடைய நிலப்பகுதிகளாக கோரி வருகின்றது. எனவே அர்கெந்தீனா தனது படைத்துறை முனைவை தனது ஆட்பகுதியை மீள்விக்கும் முனைவாகவே வகைப்படுத்தியது. பிரித்தானிய அரசு தனது கட்டுப்பாட்டில் 1841 முதல் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பாக இதனைக் கருதியது. 19ஆவது நூற்றிண்டின் தொடக்கத்திலிருந்து இங்கு குடியேறியுள்ள போக்லாந்து மக்களில் பெரும்பான்மையோர் பிரித்தானிய குடியேறிகளாக இருந்தமையால் அவர்கள் பிரித்தானிய இறைமையை ஆதரித்தனர். (1986இல் நடந்த பொதுவாக்கெடுப்பில் இதனை உறுதி செய்தனர்.) எனவே இரு நாடுகளும் அலுவல்முறையாக போர்ப் பிரகடனம் செய்யவில்லை; இருப்பினும் இரு நாடுகளாலும் தீவுப்பகுதிகள் போர் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. அலுவல்முறையாக தங்களுக்கிடையே போர் நிலை நிலவுவதாக ஏற்றன. சண்டை பெரும்பாலும் தாவாவிற்குள்ளான பகுதிகளில் மட்டுமே நடந்தது.
🌗இந்த சண்டையால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் பாதிக்கப்பட்டது. பண்பாட்டு நிலைகளிலும் இதன் தாக்கமேற்பட்டு நூல்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் எதிரொலித்தது. அர்கெந்தீனாவில் நாட்டுப்பற்று உணர்வு கிளர்ந்தெழுந்தது; இது ஆட்சியிலிருந்த படைத்துறை குழுவினருக்கு எதிராக மாறி ஆட்சி கவிழ்ந்தது. ஐக்கிய இராச்சியத்தில் ஆண்டுவந்த கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இன்றளவும் அர்கெந்தீனாவில் இதன் தாக்கம் நீடிக்கின்றது.
🌗இருநாடுகளுக்கும் அற்றுப் போயிருந்த உறவு 1989இல் எசுப்பானியாவின் மத்ரித்தில் நடந்த சந்திப்பில் இருநாடுகளின் இணையறிக்கை மூலமாக புதுப்பிக்கப்பட்டது. இதில் போக்லாந்து தீவுகளின் இறைமை குறித்து எந்தவொரு மாற்றத்தையும் இருநாடுகளும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 1994இல், அர்கெந்தீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் இப்பகுதிகளுக்கான உரிமை சேர்க்கப்பட்டுள்ளது.
போக்லாந்து போர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்