போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்
போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட அத் துறை சார்ந்த அனைவரும், மக்களுக்கு உணர்வுபூர்வமான போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் தொடர்புடைய போக்குவரத்து அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவு குறித்த விவாதத்தில் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர்:
குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவானது ஒரு அமைச்சின் வெளிப்படைத்தன்மைக்கும், பணக் கட்டுப்பாடுக்கும் ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும். வருட இறுதியில் ஏதேனும் ஒரு திட்டத்தைச் செய்வதற்குத் தடைகள் ஏற்படும்போது, குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவு மூலம் இவ்வாறான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இதற்கு முன்னர் விடயங்கள் நடந்தேறிய விதம் நமக்கு நினைவிருக்கின்றது.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.
போக்குவரத்து அமைச்சு என்பதை மோசடி, ஊழல் அதிகமாகக் காணப்படும் ஓர் அமைச்சாகவே சமூகத்தால் இனம் காணப்பட்டிருந்தது.
ஆயினும், தற்போது இந்த மனநிலை மாற்றம் கண்டுள்ளதோடு, அந்த ஊழல் மோசடிகளுக்கு எதிராக மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சின் பொதுப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான இரு துறைகளாகும்.
மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை வழங்கும் இந்த அமைச்சு, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு, மக்களின் தேவைகளுக்காகச் செயற்படும் நிறுவனங்களாக மாறி வருகின்றன.
போக்குவரத்து அமைச்சின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடிச் செல்லும் பயணம் பாராட்டத்தக்கது என நான் நினைக்கிறேன்.
இந்த குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவின் மூலம், இந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினை மேலும் மக்கள் மையப்படுத்தியதாகவும், மக்களுக்காகச் சேவை செய்யும் திறமையான நிறுவனமாகவும் மாற்ற ஒரு நல்ல வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.