போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

-அம்பாறை நிருபர்-

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸ் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதி உட்பட புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது தலைக்கவசம் அணியாது செல்வது , ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது , மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை ஓட்டிய சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இச்சோதனை நடவடிக்கையானது அம்பாரை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை, சவளக்கடை,மத்திய முகாம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.