பொலிஸ் நிலையம் வியாபாரம் செய்யும் இடம் கிடையாது

 

அம்பாறை நிருபர்

அம்பாறை பெரியநீலாவணை, சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளில் சமூக பொலிஸ் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான விசேட நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரிய நீலாவணை பகுதியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.வி. கஸ்தூரியாரச்சி ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து வேலைகளை செய்துக் கொள்கின்ற கலாசாரத்தை நிறுத்த வேண்டும் என்று இதன்போது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல தெரிவித்தார்.

அத்துடன், பொலிஸ் நிலையம் என்பது வியாபாரம் செய்யும் இடம் கிடையாது.

அது பொதுமக்களுக்கு பாதுகாப்பையும் சிவில் சட்டங்கடைளையும் நமுறைப்படுத்தும் திணைக்களமாகும்.

இனவாதம், மதவாதம் போன்ற வேறுபாடுகள் தலை தூங்குவதற்கு இடமளிக்கக் கூடாது. எல்லோரும் இலங்கை வாழ் மக்கள் என்று ரீதியில் நாம் பணியாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கல்முனை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் கல்முனை தலைமையக பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். பிரதீப் குமார உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன் சமூக பிரதிநிதிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் சமூக பொலிஸ் ஆலோசனை சபைகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.