இலங்கையில் பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவதற்கான விண்ணப்பங்களை இனி அருகிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மூலம் சமர்ப்பிக்க முடியும். இணையவழி விண்ணப்ப முறை தற்போது பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் முதலில் www.police.lk இணையத்தளத்திற்குச் சென்று Digital Services → Clearance Certificate பகுதியிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயரும் கடவுச்சீட்டில் உள்ள பெயரும் வேறுபட்டிருந்தால், உறுதிமொழிப் பத்திரமும் சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களது நெருங்கிய உறவினர் ஒருவரை தங்களுக்குப் பதிலாக ஆவணங்களைச் சமர்ப்பிக்க அதிகாரப்படுத்தலாம். விண்ணப்பத் தகவல்களை பொலிஸ் அதிகாரிகள் கணினியில் பதிவு செய்த பின்னர், விண்ணப்பதாரர் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கையொப்பமிட வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.5,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் இனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கணினி அமைப்பு முழுமையாக சீரமைக்கப்பட்ட பின்னர் இணையவழி விண்ணப்ப வசதி மீண்டும் செயல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










