பொலிஸ் உத்தியோகஸ்தரை விசாரணையின் போது தாக்கிய 7 பேர் கைது

-அம்பாறை நிருபர்-

அம்பாறையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இடம்பெற்ற இரு சாரார் முறுகல் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் முறைப்பாட்டாளர் பக்கமாக நின்ற பெண் திடிரென தனது செருப்பினை கழற்றி மறுமுனையில் இருந்த எதிராளியை நோக்கி பல முறை தாக்கியுள்ளார். இதன் போது உடனடியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் குறித்த தாக்குதலை நிறுத்துமாறு கோரி சமரசப்படுத்த முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் உத்தியோகஸ்தரை திடிரென குழுவாக இணைந்து பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள் தாக்கியுள்ளனர்.

இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடமைக்கு இடையூறு செய்தமை சமாதானத்திற்கு குந்தகம் விளைவித்தமை வன்முறையை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்ய பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பூரண விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்கொண்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்