பொலிஸ் அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியாகும் போலி செய்தி தொடர்பில் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்தி செயலிகளில் “பொலிஸ் அறிவிப்பு” என்ற தலைப்பில் பரவி வரும் செய்தி முற்றிலும் போலியானது என இலங்கை பொலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பிட்ட செய்தியில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டவை அல்ல எனவும் அவை பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதால், அதனை உத்தியோகபூர்வ அறிவிப்பாக கருத வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம், பொலிஸ் ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கைகள், உறுதிப்படுத்தப்பட்ட பொலிஸ் திணைக்களத்தின் சமூக வலைத்தள பக்கங்கள் ஆகியவற்றில் மாத்திரமே வெளியிடப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அரசாங்க நிறுவனங்களின் பெயரில் வரும் செய்திகளைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உறுதிப்படுத்தப்படாத அல்லது தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதோடு, பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது .

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேண பொலிஸார் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும்துல்லியமான மற்றும் உடனுக்குடனான தகவல்களுக்கு பொலிஸாரின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் வழிகளை மாத்திரம் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.