பொலிஸார் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவித்தல்

பணம் பறிக்கும் நோக்கில் இனந்தெரியாத நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தால் உடனடியாக தங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் உத்தரவின் பேரில் வர்த்தகர் ஒருவரின் தொலைபேசி அழைப்பின் ஊடாக கொலை மிரட்டல் விடுத்து பணம் பெற  முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

தம்மை கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இனந்தெரியாத நபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்து 2 மில்லியன் ரூபா பெற முயன்றதாக வர்த்தகர் ஒருவர்  முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாடு தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் நேற்று மாலை முல்லேரியா அங்கொட தெல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து 51 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வாழும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் உத்தரவின் பேரில் குறித்த நபர் வர்த்தகரை அச்சுறுத்தி பணம் பறிக்க முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில்  இருந்து தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக இதுபோன்று பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்