பொலிஸாரின் தடுப்புக்காவலின் போது 49 மரணங்கள் பதிவு!

2020 ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸாரின் தடுப்புக்காவலின் போது 49 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தடுப்புக்காவலின்போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அந்த ஆணைக்குழுவின் தலைவர் எல்.டீ.பி.தெஹிதெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் பொலிஸாருடனான மோதலில் 30 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எல்.டீ.பி.தெஹிதெனிய மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பாலான மரணங்கள் மேல் மாகாணத்திலுள்ள காவல் நிலையங்கள் அல்லது பொலிஸ் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும்.

கடந்த சில நாட்களாகக் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் பல இடம்பெற்று வருகின்றன.

இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உயிர் வாழும் உரிமை உண்டு.

கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் குற்றவாளியா, இல்லையா என்பதை உறுதி செய்வதும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதும் சட்டத்தின் பொறுப்பாகும்.

அதேபோன்று கைது செய்யப்படும் சந்தேக நபர்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எல்.டீ.பி.தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.