பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைந்த முதலாவது முஸ்லிம் கல்வியாளர்

-அம்பாறை நிருபர்-

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக், 2024 நவம்பர் 1 ஆம் திகதி முதல் சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்த பதவி உயர்வின் மூலம், அவர் இலங்கையில் பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைந்த முதலாவது முஸ்லிம் கல்வியாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

எந்திரவியல் பொறியியல் துறையில் சிறப்பாக பணி ஆற்றும் பேராசிரியர் முஸாதிக், பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி, நிர்வாகப் பொறுப்புகள் உள்ளிட்ட துறைகளில் தனது பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட பல்தரப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகள், சமூக மேம்பாட்டிற்கான பங்களிப்புகள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதல்கள் இவரது கல்வி சார் பயணத்தை சிறப்பாக மாற்றியுள்ளன.

“இலங்கையில் முஸ்லிம் சமூகத்திலிருந்து பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைவது இதுவே முதல்முறையாகும்.

இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வு” என கல்வி வட்டாரங்கள் பாராட்டின.

இந்த சாதனைக்காக பேராசிரியர் முஸாதிக் அவர்களுக்கு கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தினர் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

“இது அவரது அசைக்க முடியாத உழைப்பிற்கும் கல்விசார் அர்ப்பணிப்பிற்குமான சான்றாகும்.

எதிர்கால கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் மேலும் உயரங்களை எட்டுவாராக” என தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.