பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது – சஜித் பிரேமதாச
மக்கள், பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் போது, பொய்களைக் கூறி ஆட்சி செய்யும் இந்த அரசாங்கத்தின் உண்மை நிலை மக்கள் மத்தியில் தற்போது வெளிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பமுனுகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயத்தில் எந்தவகையான வேலைத்திட்டம் மற்றும் எவ்வாறான ஆட்சிமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பில் சகலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னதாக கூறியதையும், தற்போது செய்வதனையும் பார்க்கும் போது, பாரிய இடைவெளி காணப்படுகிறது.
நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானதாக இல்லை என தற்போதைய ஆட்சியில் உள்ள அரசாங்கம் முன்பு கூறிவந்தது.
அந்த நிவாரணம் குறைந்தது சுமார் ஒரு இலட்சமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
அண்மையில், ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை 40 ஆயிரம் ரூபாவாகவே காணப்படுகிறது.
பொருட்களின் விலையைக் குறைப்போம், வாழ்க்கைச் சுமையைக் குறைப்போம் என்று தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்தாலும், இன்று தேங்காய் தட்டுப்பாடும் அரிசி தட்டுப்பாடும் நிலவி வருகின்றன.
வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறினார்கள்.
இன்று வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து வருகின்றனர்.
அரிசி தட்டுப்பாடுக்கும், தேங்காய் தட்டுப்பாடுக்கும் தேசிய ரீதியில் தீர்வு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்