
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலையில் இருந்து சுமார் 16 கீலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாலம்போட்டாறு பத்தினி அம்பாளின் துணையுடனும், தம்பலகாமம் ஆதிகோணேசப் பெருமானின் ஆசியுடனும் 1974.03.24 ஆம் திகதி சிறந்த சமுக சேவையாளர் மார்க்கண்டு ஜெயம் என்பவரால் தற்காலிக ஓலைக் கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்ட பாலம்போட்டாறு சித்தி விநாயகர் வித்தியாலயம் 24.03.2024 பொன்விழா காணுகின்றது என்பதில் இக்கிராம மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.
இவருடன் இணைந்து க.சண்முகலிங்கம், க.பரமசிவம் ஆகியவர்களும் ஆரம்பகாலத்தில் தொண்டர் அடிப்படையில் கல்வி கற்பித்து இக்கிராமத்திற்கு பெரும் பங்காற்றியமை பொன்விழா காணும் இக்காலகட்டத்தில் இவர்களது தன்னலமற்ற சேவையினை நினைவுகூர வேண்டியது அவசியமானதொன்றாகும்.
இதனைத் தொடர்ந்து 1980 இல் இருந்து 1988 வரை வேலாயுதம் தங்கராசா என்பவர் இப்பாடசாலையின் முதல் நிரந்திர அதிபராக கடமையாற்றிய காலத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்டதுடன், இப்பாடசாலைக்கான நிரந்திர கட்டிடம் ஓன்றும் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க ஓரு விடயமாகும்.
1985 இல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக இடப்பெயர்வு ஏற்பட்ட காலத்தில் கற்பித்தல் நடவடிக்கைகள் சில காலம் தடைப்பட்டு இருந்தன. பின்னர் மீண்டும் தற்காலிக கொட்டில்களில் இப் பாடசாலை இயங்கி வந்தது.
இதனைத் தொடர்ந்து 1992 இல் இ. தாமோதரம்பிள்ளை அதிபராக கடமையாற்றிய காலத்தில் இப் பாடசாலைக்கென ஓதுக்கப்பட்ட நிரந்திர கட்டிடத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், 1993-1997 காலப்பகுதியில் நா.சித்திரவேல் அதிபராக பொறுப்பேற்று இப்பாடசாலையினை வழிநடத்தி சென்றதுடன், தொடர்ந்து 1997-1998 காலப்பகுதியில் சி.பத்மநாதன், 1998 – 1999 காலப்பகுதியில் சு.மோகனதாஸ், 1999- 2008 வரை சி.காளிராஜா அதிபராக பொறுப்பேற்று இப்பாடசாலைக்கு பாரிய சேவையினை ஆற்றியுள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து 2008- 2010 வரை கோ.லோகேந்திரன், 2010- 2023 வரை வை.கமலநாதன் அவர்களது சேவையினை சிறப்புடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி சென்றிருந்தார்கள் என்பது பாராட்டத்தக்க ஓரு விடயமாகும்.
இக்கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் தரம் 01 தொடக்கம் தரம் 09 வரையான இப்பாடசாலை மாணவர்கள் தமது பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி வருவது பாராட்டப்படவேண்டிய ஓரு விடயமாகும்.
மேலும் இப்பாடசாலை பொன்விழா காணும் இவ்வாண்டில் (2024) திருமதி. தமயந்தி கெங்காதரன் அதிபராக பொறுப்பேற்று அவரது சேவையினை திறமையுடனும் சிறப்புடனும் ஆற்றி வருகின்றார் என்பது சிறப்பான விடயமாகும்
