
பொன்னுத்துரை உதயரூபன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் கல்வி அமைச்சின் செயலாளரினால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தாபன விதிக்கோவையின் பிரிவு 2 அத்தியாயம் 48 இன் 31.1.13 ஆம் வாசகத்திற்கமைவாக ‘அரச அலுவலர் ஒருவரின் கடமைக்கு தடையேற்படும் வகையில் நடந்து கொள்ளல் அல்லது செயற்படுதல் அல்லது அரச அலுவலர் ஒருவரை அவமானப்படுத்துவதற்கு இழிவுபடுத்துவதற்கு அல்லது சரீர வதைகளுக்கு உள்ளாக்க அல்லது எச்சரிக்கை செய்ய முயலுதல்’ என்பதன் அடிப்படையில் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
பொன்னுத்துரை உதயரூபன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பாக தொடர்ச்சயாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அவரை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் பொன்னுத்துரை உதயரூபனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
