பேருந்து தரிப்பிட பொது மலசலகூடத்தில் நீர் இணைப்பு துண்டிப்பு : மக்கள் அசௌகரியம்

 

-மன்னார் நிருபர்-

 

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள மன்னார் நகர சபைக்குச் சொந்தமான பொது மலசல கூட தொகுதிக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்ட நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குறித்த மலசல கூட தொகுதி உரிய முறையில் மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர சபையினால் குறித்த மலசல கூட தொகுதி இவ்வருடம் குத்தகைக்கு விடப்பட்டது.குறித்த மலசல கூடத்தை பெற்றுக்கொண்ட குத்தகைதாரர் மாத மாதம் மன்னார் நகரசபைக்கு குத்தகை பணமாக 70 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகின்றார்.

எனினும் மன்னார் நகர சபை குறித்த மலசல கூடத்தை இவ்வருடம் குத்தகைக்கு விடும் முன் கடந்த வருடத்திற்கான நீர் பட்டியலை முழுமை படுத்தாது புதிய நபருக்கு குத்தகைக்கு வழங்கி உள்ளனர்.

இதன் போது நீர் பட்டியலின் நிலுவை சுமார் 2 லட்சத்திற்கும் மேல் காணப்பட்டுள்ளது.

எனினும் மன்னார் நகர சபை பழைய நிலுவை தொகையை செலுத்தவில்லை.இந்த நிலையில் குறித்த மலசல கூட தொகுதிக்கான நீர் இணைப்பை அண்மையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை துண்டித்துள்ளது.

இதனால் சில தினங்களாக குறித்த மலசல கூட தொகுதி மூடப்பட்டது. பின்னர் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து பவுசர் மூலம் நீர் வழங்கப்பட்டு குறித்த மலசல கூட தொகுதி திறக்கப்பட்டது.நீர் முடிவடைந்தவுடன் மூடப்படுகின்றது.

இதனால் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்விடயம் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் நகர சபை செயலாளர் அசமந்த போக்குடன் செயல்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மன்னார் நகர சபையின் குறித்த மலசல கூட தொகுதியில் மலசல கூடம் மற்றும் குளியல் அறையும் காணப்படுகின்றது.

மக்களிடம் கட்டணம் பெற்று பயன்படுத்த விடுகின்ற போதும் உரிய நீர் வசதி இன்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே மன்னார் நகர சபை குறித்த விடயம் குறித்து கவனம் செலுத்தி நீர் பட்டியலின் நிலுவை தொகையை செலுத்தி உடனடியாக துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பை சீர் செய்தால் மாத்திரமே குறித்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்