பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்!
பேருந்து கட்டணங்களை 0.5 சதவீதம் குறைக்கும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.
2025, ஜூலை முதலாம் திகதி முதல், பேருந்து கட்டணம் 2.5 சதவீதம் குறைக்கப்படும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்த போதிலும், கடந்த முதலாம் திகதி அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய, டீசல் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது.
எனவே, புதிய எரிபொருள் விலை திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 0.5 சதவீதம் மாத்திரமே குறைக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய கட்டண திருத்தத்தின் படி, சாதாரண சேவைக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாயாகும். இந்தநிலையில், 35 ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரையில் எவ்விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 56, 77, 87, 117, 136, 141 ரூபாய் வரையான கட்டணங்கள் ஒரு ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்து கட்டணக் குறைப்பானது, சாதாரண சேவைகள், அரை சொகுசு சேவைகள், அதி சொகுசு சேவைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பேருந்துகளுக்கும் பொருந்தும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.