
பேருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு : சாரதி மற்றும் நடத்துனருக்கு பிணை
-கிண்ணியா நிருபர்-
கடந்த மாதம் 20ம் திகதி திருகோணமலை வவுனியா நெடுஞ்சாலையில் குஞ்சோத்து சந்தி அருகில் அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்ற போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்
இவ்வழக்கின் எதிரிகளான பேரூந்தின் சாரதிக்கும், நடத்துனருக்கும் கெப்பிட்டிகோல்லாவ நீதவானும் , மாவட்ட நீதிபதியுமான அசு காஞ்சன தலா 1 லட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளார்.
இவ்வழக்கின் எதிரிகள் கடந்த மூன்று கிழமைகளாக விளக்கமறியலில் இருந்து வந்துள்ளனர்.
இவர்களினது பேரூந்தில் மோதி ஒருவர் உயிரிழந்த போதும் பேரூந்தினை நிறுத்தாமலும், பொலிஸாருக்கு தகவல் கொடுக்காமலும் சென்றதால் தண்டனை சட்ட கோவையின் பிரிவு 298 இன் கீழ் அஜித் ரணசிங்க, சின்னதுரை அமல்ராஜ் ஆகிய சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சிரேஷ்ட சட்டதரணி தி.திருச்செந்தில்நாதன் மற்றும் சதுரங்க ஆகியோர் செய்த பிணை விண்ணப்பத்தின் பிரகாரம் நீதவான் எதிரிகளை எச்சரித்து பிணையில் விடுவித்தார்.
