
பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் கலாநிதியானார்
-கிண்ணியா நிருபர்-
பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் தனது கலாநிதிப் பட்டத்தை பூர்த்தி செய்தார்.
இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமை புரியும் முபிஸால் அபூபக்கர் தனது கலாநிதி பட்டத்தை (PhD ) வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்டார்
கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட இவர் மர்ஹூம் ஆதம்பாவா முஹம்மது அபூபக்கர் மற்றும் ராபியா உம்மா ஆகியோரின் மகனாவார்.
தனது ஆரம்ப கல்வியை கல்முனை அல் பஹ்றியா பாடசாலையில் பயின்ற இவர் தனது இடைக்கால மற்றும் உயர்தரக் கல்வியினை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் பூர்த்தி செய்தார்.
உயர்தர கலைப் பிரிவில் கல்முனை ஸாஹிரா வரலாற்றில் முதன்முறையாக எல்லா பாடங்களிலும் அதிவிஷேட சித்தியைப் பெற்று ப பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கலைப் பிரிவின் மெய்யியல் துறையில் தனது கலை இளமானி (BA,Hons) சிறப்பு பட்டத்தை பூர்த்தி செய்தார்.
பின்னர்,அதே பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் போதே தனது முது தத்துவமாணி (MPhil in philosophy) பட்டத்தை மெய்யியல் துறையில் பூர்த்தி செய்தார்.
இதன் பின்னர் சீனாவில் உள்ள மத்திய சீன அரச பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி கற்கை நெறியினை தொடர்ந்து தனது கலாநிதி பட்டத்தையும் நிறைவு செய்தார்.
இவர் தனது ஆய்வுக்காக பல ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளதோடு சர்வதேச ஆய்வு கருத்தரங்குகளிலும் பங்குபற்றி தனது ஆய்வு களை சமர்ப்பித்துள்ளார் அதேவேளை இந்த ஆண்டுக்கான சிறந்த கல்வி அடைவைப் பெற்ற மாணவர் என்ற பரிசினையும் பெற்றுக் கொண்டார்.
இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப் பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் முபிஸால் அபூபக்கர் பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை பேராசிரியர் எம் எஸ் எம் அனஸ் மற்றும் சீனாவின் பிரபல புலமையாளர் ஹு ஸொங்ஷான் அவர்களின் நேரடி மாணவருமாவார்.
எல்லோருடனும் இனிமையாகப் பழகக் கூடியவராக இருப்பதோடு சிறந்த அறிவுசார் தேடல்களில் ஆர்வமுள்ளவரும் சமூக செயற்பாட்டாளர் மற்றும் பேச்சாளருமாகும் . இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மற்றும் இருப்பியல் அடையாளங்களை பாதுகாக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இவர் பல்வேறு சமூக நலன் சார்ந்த அமைப்புக்களில் இணைந்து செயற்பட்டு வருவதுடன் இவரது இந்த கல்வி அடைவு நாட்டுக்கும் சமூகத்திற்கும் சிறந்ததாக அமைவதுடன் இன்னும் பல முன்னேற்றங்களை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
