பேத்தை மீன் விஷம் உள்ளதா? உட்கொண்டால் உயிராபத்தா?

கடந்த சில நாட்களுக்கு முன் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மீன் சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது

குறித்த குடும்பத்தினர் பேத்தை என்று அழைக்கப்படும் ஒரு வகை மீனை உட்கொண்டதாகவும் அந்த மீன் விஷம் உடைய மீன் என்று சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் இந்த பேத்தை எனப்படும் மீன் நஞ்சு உடையதா? இந்த வகை மீனை சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடானதா என்று கேள்விக்கு பதிலாக பேத்தை மீனை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.

‘கடல் கோழி’ என்று அழைக்கப்படும் பேத்தை மீன் உலகம் முழுவதும் 121 வகையாக இருக்கின்றன. இதில் சில வகை இனப்பெருக்கத்திற்காக ஆறுகளிலும் வாழ்கின்றனவாம். இவை நீந்தும் விதம் மற்ற மீன்களைப் போல் இல்லாமல் மாறுபடும்.

இந்த பேத்தை மீனானது மனிதர்களை போன்று பற்கள் உடையது, இதனால் தான் இதன் விலங்கியல் பெயர் “டெட்ராடான்” என்று அழைக்கப்படுகின்றது. டெட்ராடான் என்பதற்கு லத்தீன் மொழியில் நான்கு பற்கள் என்று அர்த்தமாகும்.

இந்த வகை மீனை தோல் நீக்கி சுத்தம் செய்து இதன் வயிற்று பகுதியில் இருக்கக்கூடிய கொடிய விஷமான டெட்ராடாக்ஸின் எடுத்து விட்டு சுத்தம் செய்து சில இடங்களில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மீன் கோழிகள் போன்று சுவை உடையதால் கடல்கோழி என்றழைக்கப்படுகிறது. இந்தியா போன்ற சில நாடுகளில் இருந்து இந்த மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

இதன் இரு கண்கள் 360 டிகிரி சுற்றி பார்க்கும் தன்மை உடையது, குளிர் அதிகம் உள்ள பகுதிகளை விட மற்ற அனைத்து பகுதிகளில் இவை வாழ்கின்றன என்று கூறப்படுகிறது. தான் வாழும் இடத்திற்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது.

இதனை தாக்க வரும் எதிரிகளை பயமுறுத்த கடல் நீரை உள் இழுத்து பலூன் போன்று மாறி நீந்துகின்றன. இதை பார்க்கும் எதிரி மீன்கள் பயந்து ஓடி விடுமாம். தண்ணீரிலிருந்து வெளியே விட்டாலும் காற்றை இழுத்துக் கொண்டு பலூன் போன்று மாறும் தன்மை உடைய விசித்திர மீன் இனமாக இந்த பேத்தை மீன்கள் காணப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்