
பெற்றோரை கைவிட்டால் 3 வருட சிறை
கேரள அரசு சொந்த பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் கொடுமைகளில் இருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாக்க முக்கிய சட்டத்தை தயாரித்து வருகிறது.
மூத்த குடிமக்கள் சட்டமூலத்தின்படி, வயதான பெற்றோரை, அவர்களின் குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் கொடுமைக்கு ஆளாக்குவதோ அல்லது அவர்களின் அனுமதியின்றி முதியோர் இல்லத்தில் சேர்ப்பதோ நிரூபிக்கப்பட்டால், வாரிசுகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
பிள்ளைகளோ, கடமையுள்ள உறவினரோ தங்களைப் பாதுகாக்க மறுத்தால், எந்தவொரு வயதானவரும் இந்த மசோதாவின் படி முன்மொழியப்பட்ட சட்டத்தின் ‘பிரிவு 4’ ன் கீழ் ஆணையத்தில் புகாரளிக்க முடியும். புகாரின் அடிப்படையில் ஆணையம் விசாரணை நடத்தி உறவினர்களிடம் சமரசம் செய்யும்.
சமரசம் ஏற்படவில்லை என்றால், ஆணையம் இரு தரப்பினரையும் கேட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும், ‘பராமரிப்பு ஆணை’ தவிர, முன்மொழியப்பட்ட ‘முதியோர் பராமரிப்பு மற்றும் நலன்’ பிரிவு 7ன் கீழ் அமைக்கப்படும் தீர்ப்பாயத்தால் மட்டுமே வழங்கப்படும். இது தொடர்பான புகாரில், ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என்று மசோதா தெளிவாக கூறுகிறது.
