பெறுமதி சேர் உற்பத்திகளுக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஜனாதிபதி
ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர் உற்பத்திகளுக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கைத்தொழில்களை சிரமப்படுத்துவதற்காக அன்றி, வசதிகளை வழங்குவதற்கே அரசாங்கங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயம் மற்றும் உணவுத் துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடனான 2026 வரவு -செலவுத் திட்டத்துக்கான பூர்வாங்கக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருள்களின் விலைகள் உற்பத்தியாளரால் தீர்மானிக்கப்பட்டாலும் விவசாயப் பொருள்களைப் பொறுத்த வரையில் விவசாயத் துறையின் ஒழுங்கின்மை காரணத்தால் நுகர்வோரினால் விலைகளை நிர்ணயிக்க வழிவகுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உற்பத்தியை நுகர்வோரிடம் சென்றடைவதில் முறையான தன்மை இல்லை என்பதுடன், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.