பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிப்படுத்தவுள்ளன
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான நிலைப்பாட்டை, எதிர்வரும் 9 ஆம் திகதி பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிப்படுத்த உள்ளதாக பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஹற்றன் தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் குறிப்பிட்டார் .
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகப் பல கலந்துரையாடல்களைத் தாம் மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், தற்போது 1,350 ரூபாவை சம்பளமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெறுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோவிற்கு 50 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த கலந்துரையாடலை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக பிரதி அமைச்சர்குறிப்பிட்டார்.
ஒரு மாத காலத்துக்குள் அவர்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இந்த கலந்துரையாடல் மூலம் இணக்கப்பாடு ஒன்றை எட்டவே அரசாங்கம் என்ற வகையில் தாம் எதிர்பார்ப்பதாகவும் தொழில்நுட்பம் மற்றும் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் கடந்த காலத்தில் தேயிலை தொழிற்துறை பாரிய இலாபம் ஈட்டியுள்ளதாகவும் நட்டம் ஏற்பட்டிருக்குமானால் அதற்கு நிர்வாகமே காரணம் எனவும் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார் .
