பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைத்தது 1,750 ரூபாய்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட நாளாந்த வேதனம் இன்று செவ்வாய்க்கிழமை பெருமளவான பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய, அடிப்படை வேதனம் ஆயிரத்து 550 ரூபாயும், வருகைக் கொடுப்பனவு 200 ரூபாயும் அடங்கலாக ஜனவரி மாதத்துக்கான நாளாந்த வேதனமாக ஆயிரத்து 750 ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரத்து 550 ரூபாய், வேதன பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதுடன், வருகை கொடுப்பனவான 200 ரூபாய் பிரிதாக வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிகரிக்கப்பட்ட வேதனம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் அரசாங்கத்துக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஒப்பந்த விடயங்களை வெளிப்படுத்துமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.