பெருந்தொகையான உலர்ந்த இஞ்சி மீட்பு
புத்தளம், கற்பிட்டி – பத்தலங்குண்டுவ கடற்பிரதேசத்தில் இருந்து பெருந்தொகையான உலர்ந்த இஞ்சி மற்றும் ஒரு தொகை காலணிகள் என்பன கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பெயரில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படை தலைமையகத்தால் நடத்தப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடற் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட ஐந்து பொதிகளை கடற்படையினர் பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது, 91 கிலோ கிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 238 ஜோடி காலணிகள் என்பனவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும், குறித்த உலர்ந்த இஞ்சி மற்றும் காலணிகள் என்பன கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்காரர்களால் குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிட்டு சென்றிருக்கலாம் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் காலணிகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.