
பெண்ணின் உடையை அவிழ்த்து, வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த மூவர் கைது!
பெண்ணொருவரின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து, அதை காணொளியாக பதிவு செய்த சம்பவம் தொடர்பில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரள்ளை பெயார்பீல்ட் பகுதியைச் சேர்ந்த, 43 வயதுடைய முக்கிய சந்தேக நபர், ஹிக்கடுவையில் உள்ள ஒரு விடுதியில் மறைந்திருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த, 44 மற்றும் 55 வயதுடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களும், முக்கிய சந்தேக நபருக்கு உதவி செய்தமை மற்றும் ஆதாரங்களை மறைத்தமை ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்து, இவ்விடயம் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
பிரபல வர்த்தகரான சந்தேக நபர், தனது வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண்ணொருவரை, குழுவினர் முன்னிலையில் அந்த வீட்டிலேயே நிர்வாணமாக்கி, அதனை வீடியோ எடுத்து வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக சமூக ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விவரங்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் பிரதான சந்தேகநபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க பல விடுதிகளில் தலைமறைவாக தங்கியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
