பெண்களில் புகைப்படங்களை திருடி பேஸ்புக் மோசடி : சந்தேக நபர் கைது
பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி முகநூல் பக்கங்களை உருவாக்கி சமூக ஊடக நடவடிக்கைகள் மூலம் பணம் சம்பாதித்த ஒரு சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுத் துறையின் சைபர் குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சைபர் குற்றப் பிரிவின் அதிகாரி, திருமணமான ஒரு பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
குறித்த புகாரின்படி தனது அனுமதியின்றி தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி ஒரு முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டதாகவும், “மகே சதா னுபயி” (‘நீ என் சந்திரன்’) என்ற தலைப்புடன் இருப்பதாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்இ சந்தேக நபர் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பல முகநூல் பக்கங்களை உருவாக்கி அவர்களின் வருகை மற்றும் பார்வைகளை அதிகரித்ததாகவும், பின்னர் 10,000 முதல் 20,000 வரை பின்தொடர்பவர்களைக் கொண்ட அந்தப் பக்கங்களை ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரையிலான தொகைக்கு விற்றதாகவும் தெரியவந்தது.
மேலும், சந்தேக நபர் முகநூலை வாங்குபவர்களின் மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்த்து, மீண்டும் பக்கங்களின் உரிமையை மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில் சந்தேக நபர் பத்துக்கும் மேற்பட்ட முகநூல் பக்கங்கள் மூலம் இந்த மோசடி செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
விசாரணைகளை அடுத்து நீதிபதி சந்தேக நபருக்கு பிணை வழங்கினார். பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்றும், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை அவர் தொடர்ந்தால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் சைபர் குற்றப் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
