பெண்களின் பாதுகாப்புக்கான சட்டதிருத்த சட்டமூலம் சட்ட பேரவையில் நிறைவேற்றல்!
பெண்களின் பாதுகாப்புக்கான சட்டதிருத்த சட்டமூலம் இன்று சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்த சட்டமூலம் தமிழக சட்டப்பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்டது
பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த சட்டமூலத்தினை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று முன்வைத்தார்
ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
10 திருத்தங்களை ஸ்டாலின் முன்வைத்துள்ளார்
அதன்படி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு முன்னதாக குறைந்தது 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது
தற்போது 14 ஆண்டுகள் வழங்கப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
நெருங்கிய உறவினர் அல்லது காவல்துறை ஊழியர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் முன்னதாக குறைந்தது 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது
தற்போது 20 ஆண்டுகள் வழங்கப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேநேரம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினால் 20 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை ஆகியன வழங்கப்பட்டன
தற்போது ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
பாலியல் வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கு முன்னதாக குறைந்தது 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது
தற்போது அந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதனிடையே கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றத்திற்கு முன்னதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
தற்போது மரண தண்டனை விதிக்க வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் குற்றத்தை மேற்கொள்பவர்களுக்கு ஆயுள் தண்டணை வழங்கப்பட்டது , தற்போது அதற்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை குற்றத்திற்கு விதிக்கப்படும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது
அசிட் எனப்படும் அபாயகர திரவத்தை வீசிய குற்றத்திற்கும் வீச முயற்சித்த குற்றத்துக்கும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது
மேற்குறிப்பிட்ட இந்த விடயங்களை உள்ளடக்கிய சட்டமூலம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்