பாதாள உலக கும்பலின் தலைவரின் நண்பன் போதைப்பொருளுடன் கைது
பாதாள உலக கும்பலின் தலைவரான “புளுமெண்டல் ரவி” என்பவரின் நெருங்கிய நண்பன் கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கம்பஹா ஒருதொட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் 5 கிராம் 520 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா வெயாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர் ஆவார்.
இச் சந்தேக நபரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 6 போலி வாகன இலக்கத்தகடுகள் மற்றும் போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.