“புலம்பெயர் தமிழர்களின் தலையாய சமூகமாகக் கனடா தமிழ்ச் சமூகம் திகழ்கின்றது” -கல்லாறு சதீஷ்-
“புலம்பெயர் தமிழர்களின் தலையாய சமூகமாகக் கனடா தமிழ்ச் சமூகம் திகழ்வதாகவும், ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்துக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆதார சக்தியாகத் விளங்குகிறது” என்று கலாநிதி கல்லாறு சதீஷ் தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் கணிதக் கற்கை நெறி மையத்தின் நிறுவன அதிபர் மகேந்திரனின் தலைமையில், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேசின் நூல்கள், பாடல்கள் என்பவற்றின் அறிமுக விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டுவாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கல்லாறு சதீஷ் தொடர்ந்து தனது உரையில் தெரிவித்துள்ளதாவது.
கனடாவில் சுமார் 5 இலட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து ஒரு பலம் மிக்க ஒரு சமூகமாக வாழ்கிறார்கள், மால்ரா எனும் நாட்டின் மொத்தச் சனத்தொகையே 5 இலட்சங்கள்தான், அவர்களுக்கு என்று ஒரு தனி அரசு, அரச தலைவர், மந்திரிகள், விமானம் என்று அழகிய கட்டமைப்பு உள்ளது, அதே சனத்தொகை கொண்ட கனடியத் தமிழர்களும் இன்று கனடாதேசத்திலே காத்திரமான சக்தி கொண்டவர்களாகப் பரிமளிக்கிறார்கள்.
கனடியப் பாராளுமன்றத்திற்கு ராதிகா சிற்சபைசன் திறந்த கதவு , இன்று ஹரி ஆனந்தசங்கரியினால் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஒன்ராரியோ மாநிலங்களவையில லோகன் கணபதி சிறப்பாகக் கடமையாற்றுகிறார். தமிழ் வளர்ச்சித்துறையில் கனடா எழுத்தாளர் இணையம் கடந்த 30 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இதன் தலைவர்களாக வீணை மைந்தன்,கவிஞர் கந்தவனம், லோகேந்திரலிங்கம், குரு அரவிந்தன் ஆகியோர் செயற்பட்டார்கள், இன்று கனடாத் தமிழ் இணையத்தின் தலைவராகத் திகழ்பவர் இன்றைய நூல்களின் அறிமுக விழாவின் நாயகர் அகணி சுரேஷ்தான்.
பன்னிரெண்டு நூல்களை எழுதி, எட்டு உலக சாதனைகளை நிகழ்த்தி, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியில்பட்டாதாரியாகவும், பிரித்தானியாவில் கண ணித்துறையில் முதுமாணியாகவும் பட்டம் பெற்று விரிவுரையாளராக விளங்கும் அகணி சுரேஷ் மிகவும் தகுதியும்,பெறுமதியும் கொண்ட மனிதர் என்று பாராட்டிய கல்லாறு சதீஷ் , சுவிஷ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் சார்பாக “நிறைதமிழ்” என்று பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.
சுவிஸ் கணிதக் கற்கைநெறி மையத்தின் நிறுவன அதிபர் மகேந்திரன் தலைமையுரையைத் தொடர்ந்து,அகணி சுரேஷின் நூல்களுக்கான அறிமுக உரைகள் இடம்பெற்றன.
கதைச்சாரல் எனும் சிறுகதை நூலுக்கான அறிமுக உரையை எழுத்தாளர் துரைராசா சுரேந்திரனும், கட்டுரைச் சாரல் எனும் நூலுக்கான அறிமுக உரையை கௌரி பூரணலாஜன்பாபுவும், இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு எனும் நாவலுக்கான அறிமுக உரையினைக் நாவலாசிரியர் குடத்தனை உதயனும், வெகுளாமை எனும் கட்டுரைத் தொகுதிக்கான அறிமுக உரையினை சிறப்பு விருந்தினர் சேத்திரபாலனும், இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள் எனும் கட்டுரைத் தொகுதிக்கான அறிமுக உரையினை எழுத்தாளர் வடிவேலு அருள் நந்தனும் , அன்புடமை எனும் கட்டுரைத் தொகுதிக்கான அறிமுக உரையினை எழுத்தாளர் கமலினி கதிரும் மிகச் சிறப்பாக வழங்கினர்.
இந்த நிகழ்வில் முருகேசு குமணன் நிகழ்ச்சித் தொகுப்பை வழங்கிய அதேவேளை , வரவேற்புரையை வித்தியா மகேந்திரன் வழங்கினார்.
மேலும் பேர்ன் வள்ளுவன் பாடசாலையின் அதிபர் முருகவேள் ,அகணி சுரேஷின் மொழிசார் ஆற்றல்களைப் பாராட்டியதுடன் பொன்னாடை போற்றிக் கௌரவித்தார் மற்றும் ரதி கமலநாதன்,விமலா ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.