புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு இன்று ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தலதா மாளிகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

கண்டியில் குறித்த நிகழ்வை முன்னிட்டு விசேடப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்தார்.

தலதா மாளிகை யாத்திரையின் போது, புனித தந்ததாதுவை பார்வையிடுவதற்கு முக்கிய பிரமுகர்களுக்காக விசேட வரிசைகள் ஏற்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிக்குமார் மட்டுமே தலதா மாளிகைக்குள் நுழைய விசேட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர்களும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் பிரமுகர்களாக, விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பொதுமக்கள் யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பாக, புனித தந்ததாதுவை வழிபட வாய்ப்பு வழங்கப்படும்.

தலதா மாளிகை யாத்திரைக்குப் பிரவேசிக்க மூன்று வரிசைகளும், வெளியேற இரண்டு வரிசைகளும் அமைக்கப்படும் எனவும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்