
புத்தளம் கடற்கரையில் மஞ்சள், ஏலக்காய்கள் மீட்பு : இருவர் கைது
புத்தளம் கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி பிரதேசங்களில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய்கள் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி, ஆணவாசல பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 48 வயதுடையவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடற்படையினர் நேற்று முன்தினம் கற்பிட்டி கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஏலக்காய்கள் 8 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 240 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கற்பிட்டி – துறையடி கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட டிங்கி இயந்திர படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டனர்.
இதன்போது, குறித்த டிங்கி இயந்திர படகில் இருந்து 40 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1231 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3 பொதிகளில் அடைக்கப்பட்ட 102 கிலோ கிராம் ஏலக்காய்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள், ஏலக்காய்கள் மற்றும் டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
