புதையல் தோண்டிய மூவர் கைது
-பதுளை நிருபர்-
புதையல் தோண்டிய மூவர் பசறை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பிபில வீதி 13 ஆம் கட்டை மெத்தக்கடைக்கு மேல் உள்ள கோவில் ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு ஹோமாகம பகுதியை சேர்ந்த பூசாரியான 60 வயதுடைய பெண்ணொருவரும் 30 மற்றும் 40 வயதுடைய ஆண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காட்டுப்பகுதியில் உள்ள கற்களால் ஆன பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் புதையல் தோண்டுவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரட்னவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தர்களான சமில் உபுல் நிரஞ்சன் ஜயவீர ஆகியோரோ இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் குறித்த கோவில் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைக்கும் ஒரு களஞ்சியசாலையாக இருந்ததாக அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் கூறி வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்