
புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 6 இல்
2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அதற்கமைய, பாராளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
2026 ஜனவரி 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 3.30 மணி வரை கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் 2371/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் 2428/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
