இலங்கையில் கிரிக்கெட் நிர்வாகத்திற்கான புதிய சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்டமூலம் இலங்கை கிரிக்கெட்டை நிறுவுவதுடன், நாட்டில் கிரிக்கெட்டை நிர்வகித்தல், ஒழுங்குபடுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான அதன் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை வரையறுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் மற்றும் ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சட்டமூலம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவும் புதிய அரசியலமைப்பை தயாரித்து அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தது.










