பிள்ளையான் – டக்ளஸ் ஆகியோர் தோல்வி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி பதவிகளில் இருந்த பலர் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் வட மாகாணத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுமந்திரன் போன்றோரும், கிழக்கு மாகாணத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஜனா ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

அத்துடன், ஊழலுக்கெதிரான நாட்டை உருவாக்க வேண்டும் என்ற ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் கொள்ளைக்கு அமைவாக வடக்கு கிழக்கில் பெரும்பாலான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 63,327 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 27,986 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், சுயேச்சைக் குழு 17, 27,855 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 96,975 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 31,286 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 22,570 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 14,540 வாக்குகளையும் பெற்றுள்ளது.