பிள்ளையான் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமைகள் மனு தாக்கல்
மட்டக்களப்பில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமைகள் மனு ஒன்றை அவரது சட்டத்தரணிகள் ஊடாக இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளதாக, கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் துறை எடுத்த முடிவு அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்ற தீர்ப்பை தீர்ப்பளிக்கக் குறித்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான இமேஷா முத்துமால, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
பிள்ளையான் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கட்சி உறுப்பினர்களை உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக மட்டக்களப்பு வாவிக் கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாட இருந்த போது , கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.