பிளாஸ்டிக் போத்தல்கள், உணவுப் பெட்டிகள் மூலம் சிறுவர்களுக்கு ஹார்மோன் பாதிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகளைக் கொள்வனவு செய்யும் போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாடசாலை தவணை ஆரம்பத்தை இலக்காகக் கொண்டு தரமற்ற தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிவதற்காக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தையில் விற்பனை செய்யப்படும் 75 சதவீதமான பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் என்பன பாவனைக்குப் பொருத்தமற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் சிறுவர்களின் ஹார்மோன் ரீதியான செயல்பாடு சீர்குலைந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்