
பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாய் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை – சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி (வயது 28) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் பிரசவித்தார்.
இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன், மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில் தாயார் தொடர்ச்சியாக மயக்கத்தில் இருந்ததால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது, இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
மரணத்திற்க்கான காரணம் தெரிய வராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
