பிரான்ஸின் புதிய பிரதமர்?

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்று சில நாட்களேயான நிலையில், செபஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) பதவியிலிருந்து திடீரென விலகினார்.

அவர் பதவியேற்று அமைச்சரவையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், திடீரென பதவிவிலகியமை பிரான்ஸ் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் பிரான்ஸில் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டவர் செபஸ்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொது வெளியில் கருத்துரைத்துள்ள செபஸ்டியன், அடுத்த 48 மணி நேரத்தில் ஜனாதிபதி மக்ரோன், புதிய பிரதமரை அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் புதிய தேர்தலுக்கு வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பிரான்ஸில் அதிகரித்துள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியில், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் என்று வலது மற்றும் இடதுசாரி அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.