பிரதான வீதியின் அவல நிலை : மக்கள் எதிர்கொள்ளும் துயரம்!
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட, சாமிமலை ஓல்ட்டன் தோட்ட மின்னா பிரிவிற்கு செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதி, பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.
பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகள் என, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பிரிவில் வாழ்ந்து வருகின்றனர்.
தமது அன்றாட தேவைகளுக்காக சாமிமலை மற்றும் மஸ்கெலியா நகருக்கும், பாடசாலை மற்றும் வைத்தியசாலைக்கும் குறித்த வீதியூடாகவே செல்ல வேண்டியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக, கடுமையான நோய் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிகள் குறித்த நேரத்திற்கு கொண்டு செல்லப்படாத நிலையில் பல துரதிர்ஷ்டவசமாக சம்பவங்களும் இடம்பெற்றது.
சில கர்ப்பிணி தாய்மார்கள், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை பிரசவித்த சம்பவங்களும் பதிவாகியுள்ள நிலையில், அவர்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
இந்த வீதியை சீர் செய்து தரும்படி, பல்வேறு போராட்டங்கள் நடாத்தப்பட்டு, மலையக மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், இன்று வரை தமக்கான உரிய தீர்வு கிடைக்கவில்லை, என்று ஓல்ட்டன் தோட்ட மின்னா பிரிவில் உள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தமக்கான உரிய தீர்வை தற்போதைய அரசாங்கம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் பெற்று தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
