பால்நிலையும் மாண்புடன் கூடிய மாதவிடாய் தொடர்பான திட்டமிடற் பயிற்சி நெறி
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மாதவிடாய் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் கண்ணியத்துடன் வாழ, களங்கம், அவமானம், தடைகள், துஷ்பிரயோகம், கட்டுப்பாடுகள், வன்முறை, பாகுபாடு, சேவை மறுப்பு, கட்டமைப்பு ஒடுக்குமுறைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும் என விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள், பல்கலைக் கழக மாணவர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்ட “பால்நிலையும் மாண்புடன் கூடிய மாதவிடாய் தொடர்பான திட்டமிடற் பயிற்சி நெறியில்”; அவர் இதனை வலியுறுத்தினார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் மாவட்ட நிருவாக அலுவலர் கே. நிர்மலா, தலைமையில், அந்நிறுவன அலுவலர் பி. சினேக்காவின் இணைப்பாக்கத்தில் மட்டக்களப்பு – கல்லடியில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அங்கு இந்நிகழ்வு பற்றித் தெளிவூட்டிய விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி இந்துமதி, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு மாதவிடாய்ப் பாகுபாடு ஒரு காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இளவயதுத் திருமணங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ள தற்போதைய காலகட்டத்தில் இந்தக் குற்றச் செயல்களுக்கான காரணங்களை ஆராயும்போது அதற்குப் பின்னணியில் மாதவிடாய் பற்றிய தெளிவு பெண்களிடமும் ஆண்களிடமும் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களது சுகாதார உரிமைகள், அவற்றினை அணுகுவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாடசாலை மாணவியரின் கல்வியில் இந்த சுகாதார உரிமைகள் அதிகளவில் மறுக்கப்படுவதனையும், அதன் காரணமாக அவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகுவதனால் அவர்களது கல்வியுரிமை இழக்கப்படுவதனையும் நாம் இனங்காண முடிந்தது.
சில பாடசாலைகளிலும் பஸ்தரிப்பு நிலையங்கள், சந்தை போன்ற பொது இடங்களிலும் பெண்கள் தமது அணையாடைகளை மாற்றுவதற்கோ அவற்றைக் கழிப்பறைகளில் அகற்வதற்கோ பொருத்தமான வசதிகள் கிடையாது.
நாம் இவ்விடயத்தை அலட்சியம் செய்ய முடியாது. இதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும்.
நாளைய எதிர்காலத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பிலிருக்கும் ஒரு பெண்ணின் உடல் ஆரோக்கியம் மிக மிக முக்கியமானது என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை. மாதவிடாய் என்பது பெண்களுக்கேயுரித்தான மதிக்கப்பட வேண்டிய ஓர் உடற்தொழிற்பாடு என்பதனை அனைவரும் உணர்ந்து கொண்டு மாண்புக்குரிய மாதவிடாய் என்ற எண்ணக்கரு எமது நாட்டிலும் செயற்பாட்டில் வருவதற்கு தமது பங்களிப்பினைச் செய்ய வேண்டும்.
சமூகக் கட்டுப்பாடுகள் அல்லது கட்டமைப்புக்களின் விளைவாக பெண்கள் மாதவிடாய்க்காலங்களில் அவர்களது உணவு, போஷாக்கு நிலைமைகளில் கவனஞ்செலுத்தாதது மட்டுமன்றி அக்காலங்களில் அவர்களது உள ஆரோக்கியத்தையும் பேணத் தவறுகிறார்கள் என்று பெண்களது உரிமைகள் சார்ந்து குரல் கொடுப்போரும் சுகாதாரத் துறையினரும் கூறுகின்றனர்.
மனித இருப்பினை உறுதிப்படுத்தும் எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்கள் பெண்கள் சமூகம் என்பதனை ஒவ்வொரு மனிதனும் மனதார உணர வேண்டும்.
பெண்கள் ஒரு மனித சமூக அங்கத்தவர் என்ற ரீதியில் பெண்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும். அந்த மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கி தேசம் என்ற வகையில் வியாபிக்க வேண்டும்.
பழமையில் ஊறிப்போன பிற்போக்குவாதங்களை உடைப்பதன் மூலமே நம் நாட்டிலும் பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை ஒழிக்க முடியும்” என்றார்.
இலங்கையில் மாதவிடாய் பாகுபாடு காரணமாக பெண்கள் உடல் பாலியல், அரசியல், பொருளாதார வன்முறைகளை எதிர்கொள்ளும் அதேவேளை வளங்களை அணுக முடியாததாலும் அதிகமதிகம் இழப்புகளைச் சந்திப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.