முன்னாள் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2006ஆம் ஆண்டு முன்னாள் தொலைக்காட்சி தயாரிப்பு உதவியாளர் மிரியம் ஹேலியை பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு நடைபெற்ற மறுவிசாரணையில் வைன்ஸ்டீன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் தற்போது அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
74 வயதான வைன்ஸ்டீன், தாம் குற்றமற்றவர் என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தியதுடன், வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு நியூயோர்க்கில் அவருக்கு வழங்கப்பட்ட 23 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மாநிலத்தின் உயர்நீதிமன்றம் 2024ஆம் ஆண்டு ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்த மறுவிசாரணை இடம்பெற்றது.
இதனிடையே, கலிபோர்னியாவில் தனியான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் வைன்ஸ்டீன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கிலும் அவருக்கு மீண்டும் தண்டனை நிர்ணயிக்கப்பட உள்ளது.










