பெண் குழந்தையை பெற்ற மாணவி : சந்தேக நபர் 55 நாட்களின் பின்னர் கைது!

-அம்பாறை நிருபர்-

பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு, கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர், 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில், கனிஸ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பெண் குழந்தை ஒன்றிற்கு தாயாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையார், கடந்த வருடம் டிசம்பர் முதலாம் திகதி மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் விவாகரத்து ஆகி பிரிந்து வாழும் நிலையில், தாயுடன் தங்கியிருக்கும் குறித்த மாணவி, இரண்டு மாதங்களாக பாடசாலைக்கு செல்லவில்லை. இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மாணவியின் தாயாரிடம், மாணவி தொடர்பில் வினவிய போது, தாயாரின் பதில் குழப்பமாக இருந்தமையால், பாடசாலை நிர்வாகத்தினர் இது தொடர்பில் மாணவியின் தந்தைக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் தந்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான பாதிக்கபட்ட குறித்த மாணவி, அவரது தாயாருடன் தகாத தொடர்பில் இருந்த நபரினால், பாலியல் வல்லுறவிற்கு உட்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, சம்பவத்திற்கு உடந்தையான மாணவியின் தாயார் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்பான 45 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான பிரதான சந்தேக நபர், தலைமறைவாகி இருந்த நிலையில், 55 நாட்களின் பின்னர், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டுதலில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், கல்முனை தலைமையக பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், என எமது செய்தியாளர் தெரிவித்தார்.