பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய இஸ்ரேல்!

உயிரைப் பறிக்கும் வகையிலான கொடூரமான தாக்குதல்களை நடத்தும், பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை, இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை நிறைவேற்றியுள்ளது.

இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இஸ்ரேலின் தீவிர வலதுசாரிக் கட்சியினரால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் வருகை தந்து இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக “ஆம்” (Yes) என வாக்களித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் (West Bank) இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்படும் பாலஸ்தீனர்களுக்கு ‘தூக்குத் தண்டனை’ வழங்குவதை இந்த சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ், இஸ்ரேலிய நீதிமன்றங்கள் தனது சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க அதிகாரம் பெற்றுள்ளன.

இந்த சட்டம் ஏற்கனவே முடிவடைந்த வழக்குகளுக்குப் பொருந்தாது. இனிவரும் காலங்களில் பதியப்படும் புதிய வழக்குகளுக்கு மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த சட்டமானது இனவாதத் தன்மையுடையது என்றும், மிகவும் கொடூரமானது என்றும் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், இவ்வாறான தண்டனைகள் தாக்குதல்களைத் தடுக்க உதவாது எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்போது இஸ்ரேலிய உயர் நீதிமன்றத்தில் பல சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.