பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளியிடாவிட்டால் நீங்களும் ஊழல்வாதிகள் தான் – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
-யாழ் நிருபர்-
இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை, என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் வியாழக்கிழமை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது.
நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரசினை எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறை வாள்வெட்டு, கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்தகாலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை.
இவர்களும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் இல்லையேல் நீங்களும் ஊழல்வாதிகள் தான்.
இலங்கை விடயம் சம்மந்தமாக தி.மு.க கனிமொழியுடன் சந்திப்பை நடத்தியிருந்தோம். மத்திய அரசில் தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை குறைந்துள்ளது.
இலங்கை தமிழர்கள் தீர்வு விடயத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது. அவ்வாறு தேவையில்லை. ஏற்கனவே இணங்கிக் கொண்ட விடயம் எனவே இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம்.
தமிழரசு தலைமை தொடர்பிலும் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ச.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் பேசுவருகின்ற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம், என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்