பாரிய விபத்தை தவிர்த்து சுமார் 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இ.போ.ச பேருந்தின் சாரதி!

-மஸ்கெலியா நிருபர்-

சாரதி ஒருவர் சாமர்த்தியமாக செயற்பட்டு, பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடவத்தை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (CTB) சொந்தமான பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, செங்குத்தான சரிவான பகுதியில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, சாரதி சாமர்த்தியமாகச் செயற்பட்டு பேருந்தை வீதியோர மண் மேட்டில் மோதி நிறுத்தியுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவலை ‘மகா வங்குவ’ (பெரிய வளைவு) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்தை வளைவில் திருப்ப முற்பட்டபோது, அதைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டாம் கியருக்கு (2nd Gear) மாற்றியதாகவும், அந்த நேரத்தில் பிரேக் முறைமை செயலிழந்ததால், கைமுறை பிரேக்கை (Hand Brake) பயன்படுத்தி பேருந்தை சரிவான பகுதியிலிருந்த மண் மேட்டில் மோதச் செய்து நிறுத்தியதாக பேருந்தின் சாரதியான மகேஷ் சுதர்சன் தெரிவித்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரின் இந்தச் செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தினுள் சுமார் 80 பயணிகள் பயணித்துள்ளனர், அவர்கள் அனைவரும் காயங்களின்றி தப்பியதுடன், மாற்றுப் பேருந்து மூலம் அவர்களை அனுப்பி வைக்க சாரதியும் நடத்துனரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.