பாரிய நிதி மோசடியில் சிக்கி கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ள கிரிக்கெட் வீரர்கள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் உலகின் முன்னணி நட்சத்திரங்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் பாரிய நிதி மோசடி ஒன்றில் சிக்கி கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மோசடி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுமார் 12 க்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அணித்தலைவர் பாபர் அசாம், நட்சத்திர துடுப்பாட்டவீரர் மொஹமட் ரிஸ்வான், வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி, பக்கர் சமான் மற்றும் சதாப் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளுக்கு அனுசரணை வழங்கிய மற்றும் வீரர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு தொழிலதிபரையே இவர்கள் நம்பியுள்ளனர்.

ஆரம்பத்தில் அதிக இலாபம் தருவதாகக் கூறி இவர்களிடம் இருந்து பெருந்தொகை முதலீடுகளை அவர் பெற்றுள்ளார்.

முதல் சில மாதங்கள் இலாபப்பணத்தை வழங்கிய அந்த தொழிலதிபர், பின்னர் தனக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி பணத்தைத் திருப்பித் தர மறுத்துள்ளார்.

தற்போது அந்த தொழிலதிபர் பாகிஸ்தானை விட்டுத் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீரர்கள் தங்களது சொந்த சேமிப்பு மட்டுமன்றி, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தையும் இதில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மோசடியின் மொத்த மதிப்பு ஒரு பில்லியன் ரூபாய்க்கும் (100 கோடி பாகிஸ்தான் ரூபாய்) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வீரர்கள் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபூர்வமற்ற முறையில் அறிவித்துள்ளனர்.

வீரர்கள் அதிக வருமானம் ஈட்டும் நோக்கில் இவ்வாறான சட்டவிரோத நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.